பா.ம.க. தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது - வக்கீல் பாலு பேட்டி
பா.ம.க.வில் இரண்டு அணிகள் என்று இனி கிடையாது என்று வக்கீல் பாலு கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
பா.ம.க.வில் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 9-ந்தேதி அன்புமணி தலைமையில் பா.ம.க. பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவராக அன்புமணி மேலும் ஓராண்டுக்கு பதவியில் நீடிப்பார் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், அன்புமணி கூட்டிய பொதுக்குழுக்கூட்டம் சட்ட விரோதம் என தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் அனுப்பினார். பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாசின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கூட்டத்தையும் கூட்டுவதற்கு அன்புமணிக்கு உரிமை இல்லை என்றும் அவர், சாதாரண செயல் தலைவர்தான் என்றும் ராமதாஸ் தரப்பில் முறையிடப்பட்டது. மேலும் கடந்த 11-ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து அவரை நீக்குவதாக அறிவித்தார்.
ராமதாசின் இந்த அறிவிப்பு செல்லாது என்று அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பா.ம.க.வில் கடும் குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணியின் ஆதரவாளரான வக்கீல் பாலு, தேர்தல் ஆணையத்திடம் இருந்து அன்புமணிக்கு வந்த கடிதத்தை வெளியிட்டு கூறியதாவது:-
மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் நடந்த கட்சியின் பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மூலம் அன்புமணி தலைமையில் இயங்குவதே பா.ம.க. என்பது உறுதியாகி உள்ளது.
பொதுக்குழுவில், அடுத்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி வரை அன்புமணியின் (கட்சி தலைவர்) பதவியை நீட்டித்த தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. பா.ம.க.வின் தலைமை அலுவலகமாக சென்னை தியாகராயநகரில் உள்ள திலக் தெருவில் உள்ள முகவரியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கிறது.
அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும்தான் பா.ம.க. கொடியை பயன்படுத்த முடியும். கட்சியில் குழப்பங்கள் தீர்ந்து விட்டன. பா.ம.க. வேட்பாளருக்கு ‘மாம்பழம்’ சின்னத்தை வழங்க அன்புமணிக்கே அதிகாரம் உள்ளது. அன்புமணி தலைமையைதான் 100 சதவீத பா.ம.க.வினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கட்சி நிறுவனர் ராமதாஸ் உடன் உள்ள சிலரும் அன்புமணி பக்கம் வர வேண்டும். பா.ம.க.வில் இரண்டு அணிகள் என்று இனி கிடையாது, அன்புமணி தலைமையில் பா.ம.க. இயங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.