'மதவாத அரசியலுக்கு தமிழக மக்களும், தமிழ் கடவுள் முருகனும் மயங்க மாட்டார்கள்' - திருமாவளவன்

சங்கிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை 2026 தேர்தலில் முருகன் உறுதிப்படுத்துவார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-07 17:18 IST

சென்னை,

மதுரை மாவட்டத்தில் வரும் 22-ந்தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், மத்திய மந்திரிகள், பா.ஜ.க. தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். அதே சமயம், இது சங்கிகள் மாநாடு என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"மாநிலத்திற்கு மாநிலம் பா.ஜ.க. தனது மதவாத அரசியலை மாற்றிக்கொள்ளும். வட இந்தியாவில் ராமர், விநாயகர், மேற்கு வங்காளத்தில் துர்கா, காளியை வைத்து அரசியல் செய்வதற்கள் தமிழ்நாட்டில் முருகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். பிற மாநிலங்களில் மதவாத அரசியலுக்கு மக்கள் மயங்குவதைப் போல் தமிழக மக்களும், தமிழ் கடவுள் முருகனும் மயங்கிவிட மாட்டார்கள்.

மதவாதத்தை விரட்டி அடிக்கக் கூடியவரான முருகன், சங்கிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை 2026 தேர்தலில் உறுதிப்படுத்துவார். அவர்கள் என்ன மாநாடு போட்டாலும், அது தமிழ்நாட்டில் எடுபடாது."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்