'தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள்' - எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி

தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு தீர்வைத் தவிர வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-06 20:31 IST

சென்னை,

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், "இன்னும் வராத ஒன்றை 'புலி வருது, புலி வருது' என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத்தான் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்" என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தங்கள் சொந்த மாநில நலன்களை கைவிட்டு, தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவர்கள், எங்களுக்கு போதனை செய்ய உரிமை இல்லை.

தமிழ்நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை, நமது விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள்.

அச்சுறுத்தல் எங்கள் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது. உங்கள் டெல்லி எஜமானர்களிடம் அவர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் வேலை செய்யாது என்று சொல்லுங்கள். எழுதப்பட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு தீர்வைத் தவிர வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், அரசியலமைப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை குரல் எழுப்புவோம்."

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்