பாஜகவில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை: வானதி சீனிவாசன்
ஜி.எஸ்.டி. குறைப்பால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.;
கோவை,
கோவையில் பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதனால் அதிகமாக பயன்பாட்டில் உள்ள பொருட்களின் விலை குறைந்து உள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஜி.எஸ்.டி. குறைப்பால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். வரி குறைப்பு செய்யாமல் சில நிறுவனங்கள் பழைய விலையில் விற்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் விலையை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வியாபார நிறுவனங்களும் ஜி.எஸ்.டி. குறைப்பால் ஏற்பட்ட விலை வித்தியாச பட்டியலை வைக்க வேண்டும். வரி குறைப்பால் தீபாவளிக்கு மிச்சம் செய்யும் பணத்தில், பெண்கள் 2 சேலைகளை கூடுதலாக வாங்க முடியும். ஜி.எஸ்.டி. குறைப்பை அமல்படுத்துவதை மாநில அரசுதான் செய்ய வேண்டும். அது குறித்து பேசாமல் முதல்- அமைச்சர் வேடிக்கை பார்க்கிறார்.
கடந்த காலங்களில் ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரித்ததால் தான், 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்க முடிந்தது. தி.மு.க.வை வீழ்த்தும் ஒரே சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் உண்டு. பா.ஜனதாவில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை. அண்ணாமலை கூட்டணியை பலப்படுத்த முயற்சிகளை செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.