திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.;

Update:2025-07-01 10:26 IST

மதுரை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் மடப்புரம் இளைஞர் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். மரண வழக்கு தொடர்பாக, அதிகாலை 4 மணி வரை ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 5 பேரையும் வேனில் ஏற்றி, திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் போலீசார் ஆஜர் செய்தனர். இதனைத்தொடர்ந்து 5 போலீஸ்காரர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்

முன்னதாக மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 போலீசார் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசார் என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் மரணம் வழக்கு கு.எண்:303/2025 கொலை வழக்காக மாற்றப்பட்டு கொலை குற்றச்சாட்டில் தொடர்புடைய 5 குற்றவாளிகளை கைது செய்து 15.07.2025 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு மேலும் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு (CBCID) மாற்றப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்