தூத்துக்குடி: கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை- போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய நுழைவாயிலுக்கு ஒன்றாக வந்த ஆண், பெண் ஆகிய இருவரும் விஷம் அருந்தி விட்டதாகவும், தங்கள் இருவரையும் காப்பாற்றுமாறும் கூறியுள்ளனர். இதனையடுத்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் அவர்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் உடனடியாக அவர்களை காவல் நிலையம் எதிரே இருந்த ஒரு ஆட்டோ மூலம் துரிதமாக செயல்பட்டு குலசேகரன்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் செல்லும்போது மேற்சொன்ன இருவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
உடனடியாக மேற்சொன்ன சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மேற்சொன்னபடி காவல் நிலையத்திற்கு விஷம் அருந்தி வந்தவர்கள் திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் மகன் தங்கவேல்சாமி (வயது 28) மற்றும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண் என்பதும், அவர்கள் இருவரும் திருமணம் ஆனவர்கள் என்பதும், அவர்கள் திருமணத்தை மீறி உறவில் இருந்து வந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், "மேற்சொன்ன இருவரும் விஷமருந்தி இன்று காலை தங்களை காப்பாற்ற வேண்டி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்கள் எனவும், இந்த சம்பவம் குறித்து ஒரு செய்தி தொலைக்காட்சி 'காவல் நிலையம் வந்த இருவர் மரணம்' என அதன் உண்மை தன்மையை தெரியாமல் செய்தி வெளியிட்டதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவிப்பதுடன், அதுகுறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் செய்தி தொடர்பான உண்மைத்தன்மை தெரியாமல் செய்தியை பரப்ப வேண்டாம்" எனவும் கூறப்பட்டுள்ளது.