தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை குடும்ப பிரச்சினை காரணமாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.;
கடந்த 2019ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், புதூர் மெயின்ரோடு அருகே வைத்து விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பால்பாண்டியன் மகன் வடிவேல்முருகன் (வயது 40) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக அவரது உறவினரான விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் அற்புதசெல்வம்(எ) ஆஸ்வின்(33) என்பவர் கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் புதூர் காவல் நிலைய போலீசார் அற்புதசெல்வம்(எ) ஆஸ்வினை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா இன்று குற்றவாளி அற்புதசெல்வம்(எ) ஆஸ்வினுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் முனியசாமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.