தூத்துக்குடி: சைபர் குற்ற மோசடி வழக்குகளில் ரூ.46 லட்சம் மீட்பு
தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் மொத்தம் ரூ.1 கோடியே 23 லட்சம் பணம் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாவட்டத்தில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், போலி அரசு வேலை, டிஜிட்டல் அரஸ்ட் போன்ற பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் பணம் அனுப்பி பாதிக்கப்பட்ட 22 நபர்கள் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளனர்.
மேற்சொன்ன புகார்களின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. சகாய ஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டு, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேற்சொன்ன வழக்குகளில் மொத்தம் ரூ.46 லட்சத்து 24 ஆயிரத்து 350 பணம் திரும்ப பெறப்பட்டு மீட்கப்பட்டது.
அதன்படி மீட்கப்பட்ட பணத்தை நேற்று மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மேற்சொன்ன பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் மொத்தம் ரூ.1 கோடியே 23 லட்சம் பணம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.