சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்
6-வது நாளாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி: 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும். தற்போது சபரிமலை அய்யப்பன் சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் 2025-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை 2026 ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டின் கடைசி நாள் என்பதாலும், அரையாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையாலும் கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஜனவரி 6-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடர், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவள்ளூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
உலகம் முழுவதும் நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது; ஆனால்.... துரை வைகோ பேட்டி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. கணிசமான வாக்குகள் பிரியும். தி.மு.க.வுக்கு மாற்று நாங்கள்தான் என்று விஜய் கூறுவது அவருடைய ஜனநாயக உரிமை. ஆனால் எங்களை பொறுத்தவரை மற்ற கட்சிகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அவரது வருகையால், தி.மு.க. கூட்டணிக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று துரை வைகோ கூறியுள்ளார்.
தங்கம் விலை மேலும் குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.258-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.