இமானுவேல் சேகரனாரின் உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை - தவெக தலைவர் விஜய்
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அவரது படத்துக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நடிகை ஐஸ்வர்யாராயின் புகைப்படத்தை ஏஐ-யில் பயன்படுத்த தடை
நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயர், ஏஐ உருவாக்கும் புகைப்படத்தை முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன் அனுமதி இன்றி பயன்படுத்தும் இணையதளங்களை 7 நாட்களுக்குள் தடை செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
"ஓபிஎஸ்யிடம் போனில் பேசினேன்" நயினார் நாகேந்திரன்
ஓபிஎஸ்யிடம் போனில் பேசினேன், தேவைப்பட்டால் டிடிவி தினகரனுடனும் பேசுவேன், ஆட்சி மாற்றத்திற்கு யார் யாரிடம் பேச வேண்டுமோ பேசுவேன். ஓபிஎஸ், டி.டிவி., கோரிக்கை எல்லாம் எடுத்து செல்ல முடியாது, அதிமுக பெரிய கட்சி. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ஈ.பி.எஸ் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வரதராஜ் வழக்கு தொடர்ந்தார்.
குழந்தைத் திருமண ஏற்பாட்டை அதிகாரிகளுக்கு தெரிவித்த நபர் மீது தாக்குதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குழந்தைத் திருமண ஏற்பாட்டை அதிகாரிகளுக்கு தெரிவித்த நபர் மீது, சிறுமியின் பெற்றோர் தாக்குதல் நடத்தி உள்ளனர். லியாகத் அலி என்பவர் தனது 16 வயது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்ய, பக்கத்து வீட்டில் வசிக்கும் அலிமுல்லா என்பவர் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாகக் கூறி, லியாகத் அலியின் குடும்பத்தினர் அலிமுல்லாவை தாக்கியுள்ளனர். மேலும், சிறுமியை திருமணம் செய்ய இருந்த நபரும் அலிமுல்லா மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்மலா சீதாராமன் செப். 14 ஆம் தேதி சென்னை வருகை
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செப். 14 ஆம் தேதி சென்னை வர உள்ளார். ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பாஜக நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
மோகன் பகவத்திற்கு `75வது பிறந்தநாள்’ - பிரதமர் வாழ்த்து
உலகமே ஒரு குடும்பம் என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டு, முழு வாழ்வையும் சமூக மாற்றத்திற்கும், சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணித்த மோகன் பகவத் அவர்கள், நீண்ட நெடிய ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன் என ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
உத்தரவிட்டும் ஏன் கலைந்து செல்லவில்லை? ஐகோர்ட்டு கேள்வி
போராட்டத்தின்போது நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி காவல்துறையினர் அத்துமீறியதாக தூய்மை பணியாளர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. கலைந்து செல்ல மறுத்ததால் தூய்மை பணியாளர்களை கைது செய்ததாக காவல்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் அமைதியாக கலைந்து செல்லவில்லை என தூய்மை பணியாளர்கள் தரப்புக்கு கேள்வியெழுப்பிய சென்னை ஐகோர்ட்டு, 3 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்டு
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால் நாளையே வழக்கை விசாரிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்யப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும். போட்டி திட்டமிட்டபடி நடக்கும், அவசர வழக்காக இதனை விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மாநிலம் இதுவரை இல்லாத தொழில் வளர்ச்சி கண்டுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கையெழுத்தான தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 77% ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. எஃகு போன்ற உறுதியோடு சொல்கிறேன், என் இலக்கில் வெற்றி பெறுவேன். தமிழ்நாடு உடன் பயணித்தால் கண்டிப்பாக வெற்றிதான், அதனால் எப்போதும் தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யுங்கள் என ஓசூரில் நடைபெற்ற தொழில் முதலீட்டு மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.