வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம் - விஜயை சாடிய சீமான்
தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளிக்கையில், “ ரோடு ஷோ, கூட்டு ஷோ என கை காட்டி செல்வது மக்கள் சந்திப்பு கிடையாது. மக்கள் பிரச்னைக்காக, மக்களுடன் நேரடியாக சென்று நிற்பதுதான் உண்மையான மக்கள் சந்திப்பு. இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்” என்று கூறினார்.
இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று (செப்.11) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. ஆத்திரத்தில் இருவரின் தலைகளை கொடுவாளால் வெட்டி எடுத்த கணவர்
நேற்று இரவு கொளஞ்சி வெளியூர் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு அருகில் உள்ள இடத்தில் மறைந்து கொண்டார். தனது கணவர் வெளியூர் சென்றதான நினைத்த லட்சுமி, தனது கள்ளக்காதலன் தங்கராசுவை செல்போனில் அழைத்துள்ளார். அதன்படி தங்கராசுவும் இரவில் லட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
'அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை' - வழக்கறிஞர் பாலு
அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை என அன்புமணி ராமதாஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ம.க. செய்தித்தொடர்பாளர் பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாமக விதிகளின்படி ராமதாஸின் அறிவிப்பு செல்லாது. தேர்தல் ஆணையத்திலும் பாமகவின் தலைவர் என அன்புமணி பெயர்தான் உள்ளது. கட்சியின் நிறுவனராக ராமதாஸ் தொடர்கிறார். அதில் மாற்றம் இல்லை. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணியின் தலைவர் பதவி உள்ளது. எதிர்க்கட்சி என்ற பணியை ஆக்கப்பூர்வமாக செய்து வருகிறார் அன்புமணி
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வார ஓடிடி ரிலீஸ்!.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன.
ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது -உச்சநீதிமன்றம்
ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஊர்வசி ஜெயின் தலைமையிலான நான்கு சட்ட மாணவர்கள் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை (14-ம் தேதி) அன்று நடைபெற உள்ள நிலையில் இதனை அவசர வழக்காக எடுத்து கொண்டு நாளையே விசாரிக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த போட்டியை ரத்து செய்ய முடியாது திட்டமிட்டபடி நடைபெறும் என்று தீர்ப்பளித்துள்ளனர். அத்துடன் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண திட்டங்கள் ரத்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கிருஷ்ணகிரி வந்துள்ளார். அங்கு ஒசூரில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதனை தொடர்ந்து இன்றும், நாளையும் கிருஷ்ணகிரியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிலையில், சபரீசனின் தந்தை மறைவு காரணமாக மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார். இதனால் அவரது பயண திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் சேர்ந்து, தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்' என உறுதி ஏற்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்சியில் நீக்கப்பட்டதாக ராமதாஸ் கூறிய நிலையில் பாமக தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை
ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத காரணத்தினால் பாமகவின் செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் பாமக தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தன்னை நீக்கியதாக ராமதாஸ் அறிவித்துள்ளநிலையில் கடலூரில் நிர்வாகிகளுடன் அன்புமணி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்
நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன், அங்கு அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.