இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
காசா நகரத்தில் இருந்து கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல், காசா நகரை முழுமையாக கைப்பற்ற திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.
நேபாள சிறையில் இருந்து தப்பி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 60 கைதிகளை பாதுகாப்புப் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியை பாதுகாப்புப் படை தீவிரமாக்கியது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 5 - 6 மணி வரை பரங்கி மலை முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். விமான நிலையம் முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இணையதளங்களில் 'திருப்பதியில் தங்குமிடம், இலவச தரிசனம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்கிறோம். ஸ்ரீனிவாச கல்யாண நிகழ்ச்சி நடத்துகிறோம்' என்றெல்லாம் வரும் போலி விளம்பரங்களை பக்தர்கள் நம்ப வேண்டாம். இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
"வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை சட்டப்பூர்வமாகவும், மக்களுடன் களத்திலும் எதிர்ப்போம், 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்' என்ற முழக்கத்தை முதலமைச்சர் முன்னெடுக்க உள்ளார்" ஓரணியில் தமிழ்நாடு குறித்து செப்.20 ஆம் தேதி மாநிலம் முழுவதும் விளக்கக்கூட்டங்கள் நடைபெறும்- என்று ஆ.ராசா எம்.பி கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் அருகே என்கவுண்ட்டரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தேடப்பட்டு வந்த முக்கிய நபரான மனோஜ் உள்பட 10 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
உத்தரகாண்டில் வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1200 கோடி நிதி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கபடும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் 2வது மூத்த நீதிபதியாக எம்.சுந்தர் தற்போது பணியாற்றி வருகிறார்.
"நாட்டில் நிலவும் கடினமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவரவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அமைதியை நிலைநாட்டவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முயல்கிறோம். விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும். நம்பிக்கையுடன் இருங்கள்” என நேபாள மக்களுக்கு அந்நாட்டு அதிபர் ராம் சந்திரா பவுடல் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ் கனிக்கு எதிரான சொத்து குவிப்பு புகாரில் ஒரு வாரத்திற்குள் சிபிஐ பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.