இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
நாளை சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காணவில்லை என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட 6 வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜார்ஜியாயில் கணவரை கார் ஏற்றி கொலை செய்த ஜோசப் என்பவரை கட்டியணைத்து மன்னிப்பு வழங்கிய ரெஜினா என்ற பெண். கணவர் ஜான்சனின் மறைவிற்கு பிறகு அவரின் குடும்பமே உருக்குலைந்த நிலையில், இவரின் இந்த உயர்ந்த குணத்தை பலரும் பாராட்டியுள்ளனர். ஜோசபுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலேயே கதறி அழுது மன்னிப்பு கோரியுள்ளார் ஜோசப்.
சீனா உடனான எல்லை வழி வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் எல்லை வழியாக வர்த்தகத்தை தொடங்க சீனத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலால், கடந்த 2020-ம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.
தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன், அவற்றைப் பாதுகாக்க தனி காப்பகம் அமைக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது. சென்னையில் 1.80 லட்சம் நாய்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டில் சுமார் 20,000 நாய்க் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே கடுவனூரில் உள்ள பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென் கொரியா: மகள் முதல் மதிப்பெண் பெறுவதற்காக கேள்வித் தாள்களை திருடிய தாய் மற்றும் ஆசிரியர் கைது செய்யப்பட்டனர். தாயிடம் பணம் பெற்ற ஆசிரியர் அவருடன் இணைந்து கடந்த 2 வருடங்களாக பள்ளிக்குள் நுழைந்து கேள்வித்தாள் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருக்க, இம்முறை வசமாக சிக்கியுள்ளனர். மோசடி செய்து இதுவரை அம்மாணவி பெற்ற மதிப்பெண்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கைது செய்யப்பட்டு 12 மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த 922 தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர். கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ’நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்களின் செயல்பாடு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் கேட்டறிந்தார்
’உங்களுடன் ஸ்டாலின்’ மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பணியாற்றி வரும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் முதல்-அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
’நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் ரத்த பரிசோதனை முடிவுகள் தாமதமாக வருவதாக வரும் புகார்களை சரிசெய்ய வேண்டும். முகாம்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் அமைத்திட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு வலியுறுத்தி உள்ளார். பெறப்பட்ட மனுக்கள் உடனடியாக தீர்வுகான வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை 4 நாட்களில் இணையத்தில் வெளியிட வேண்டும். மாவட்டவாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டனர் என்பதை குறிப்பிட்டு பட்டியல் வெளியிட வேண்டும். பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கு எதிரான வழக்கில், நீக்கப்பட்ட காரணத்தை தெளிவாக குறிப்பிட தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்னி கார் மோதிய விபத்தில், காரில் இருந்த பூர்ணதேவி (40) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து ராஜ்குமார் என்பவர் குடும்பத்துடன் ராஜபாளையம் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்குச் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது.