தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் அது ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடியாக அதிகரிக்கிறது. பண்டிகை காலங்களில் மது விற்பனை மேலும் 15 சதவீதம் உயருகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை ரூ.438 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை: பொதுமக்களுக்கு உதவுங்கள் - அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும்படி அதிமுகவினரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துகிறேன்
’சக்தி ஷாலினி’யில் இணைந்த சையாரா பட நடிகை...
சக்தி ஷாலினி அடுத்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது.
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
காவலர் நினைவு சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மரக்கன்று ஒன்றை முதல்-அமைச்சர் நட்டு வைத்தார். அதனை தொடர்ந்து காவல்துறையில் கருணை அடிப்படையில் சேர்ந்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை: தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை,
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் டெல்டா மாவட்டங்கள் ஆகியவற்றின் கலெக்டர்களுடன் முதல்வர் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். பேரிடர் மேலாண்மை நிர்வாகிகள், தலைமை செயலாளர் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், முதல் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்.
பவானிசாகர் அணையில் இருந்து 9,300 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்
ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 102 அடியை எட்டிய நிலையில், 8 மதகுகள் வழியே 9,300 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.