இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மழையில் இருந்து மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் இரவு முதல் காலை வரை மழை உச்சமாக இருக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இரவு முதல் காலை வரை மழை உச்சபட்சமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
கடந்த11 மாதங்களில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 918 கோடியே 60 லட்சம் ரூபாயை பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்து 30 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 20.20 அடி தண்ணீர் உள்ளது. குன்றத்தூர், வழிதிலம்பேடு, ராமாபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சி நெரிசலைக் குறைக்க கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசலை தவிர்க்க சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தன்னார்வலராக இணைய விருப்பமா? என்ற கேள்வியை எழுப்பி, மழை காலத்திலும் பேரிடர் நேரத்திலும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் whatsapp குழு ஒன்றை உருவாக்கியுள்ளது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை.
போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கும், மழை வெள்ளங்களில் மக்கள் வாகனங்களில் சிக்கிக் கொண்டால் உதவி செய்யவும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1077, 04142 –220 700 எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.