தமிழ்நாடு முழுவதும் இன்று மின்வாரிய சிறப்பு முகாம்
மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்கள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிமுதல் மாலை 5 மணிவரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிலும் ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கவனமா இருங்க.. பரவும் மெட்ராஸ் ஐ - அறிகுறிகள் என்னென்ன..?
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை வழக்கத்தை விட 20 சதவீதம் 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு அதிகரித்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்விழி, இமை ஜவ்வு படலத்தில் வைரஸ் தொற்றால் ஏற்படும் இந்தப் பாதிப்பைத் தொடக்கத்திலே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.
கண்விழி சிவந்து இருத்தல், தொடர்ந்து நீர் வடிதல், கண்களில் எரிச்சல், தெளிவற்ற பார்வை போன்றவை மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள் ஆகும்.
தெளிவில்லாத பார்வை இருந்தால் தாமதிக்காமல் டாக்டரை நாடுவது நல்லது.
பங்குச்சந்தையில் சரிவு: இந்திய முதலீட்டாளர்களுக்கு ரூ.9.5 லட்சம் கோடி இழப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொண்டு வந்துள்ள வரிகள் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன.
பரஸ்பர வரிவிதிப்பால், இரண்டாவது நாளாக அமெரிக்க பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. DOW JONES பங்குச்சந்தையில் 2,000 புள்ளிகள் சரிந்ததால், முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடிகளை இழந்தனர்.
இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தது. நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் விதித்த வரி காரணமாக ஆட்டோமொபைல் துறை தொடங்கி ஐ.டி. துறை வரை எல்லாம் மொத்தமாக வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சொத்து வரி செலுத்துவோருக்கு ரூ.5,000 சலுகை - மதுரை மாநகராட்சி அறிவிப்பு
மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5000) சிறப்பு சலுகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள், ஏப்ரல் மாதம் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அளவில் சொத்து வரி வசூல் செய்வதில் மதுரை மாநகராட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான கொடிவேரி அணையில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கொடிவேரி அணையில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: பெருமாநல்லூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்த இயந்திரங்கள், பின்னலாடை துணிகள் என அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது
பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்த 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் இரவு தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்டை நாடான இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவுடன் இன்று (சனிக்கிழமை) விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவாக்குவது குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா-இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே முதல் முறையாக ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.