இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் 11.11.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பல்லாவரம்: கண்ணன் நகர், ராதா நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜமீன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லக்ஷ்மி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் பிரதான சாலை, காந்தி நகர், சுபாஷ் நகர், நடராஜபுரம், நெமிலிச்சேரி உயர் சாலை, பெரியார் நகர், குறிஞ்சி நகர், செந்தில் நகர், நடேசன் நகர், போஸ்டல் நகர், ஏ.ஜி.எஸ். காலனி, ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், சோமு நகர், நியூ காலனி, ஜிஎஸ்டி சாலை, சிஎல்சி லேன், ஹஸ்தினாபுரம், புருசோத்தமன் நகர், பஜனை கோயில் தெரு, ஜெயின் நகர், எஸ்பிஐ காலனி, கஜலட்சுமி நகர், என்எஸ்ஆர் சாலை.
எழும்பூர்: சைடன்ஹாம்ஸ் சாலை, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு, ஏ.பி. சாலை, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன் குளம், சுப்பாகா நாயுடு தெரு, நேரு வெளிப்புற மற்றும் உள்விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க், பெரம்பூர் பாராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விர்ச்சூர்முத்தையா தெரு, டேலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு, அஸ்தபுஜம் சாலை, ராகவா தெரு.
ஈரோடு: கோர விபத்தில் கல்லூரி மாணவன், மாணவி பலி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 19). கல்லூரி மாணவர். காமராஜர் நகரை சேர்ந்தவர் சவுபர்ணிகா (வயது 19). இந்நிலையில், ஸ்கூட்டரில் அமர்ந்தபடி சதீஷ் மற்றும் சவுபர்ணிகா சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த லாரியின் மீது அவர்களுடைய வாகனம் மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை இருவரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்திற்கு கொடுத்த வாக்குறுதிகள்; சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தருமபுரியில் வன வளங்கள் சார்ந்த கல்வியை மேம்படுத்தும் நோக்கில் புதிய வனயியல் கல்லூரி துவங்கப்படும் என்றும், பேரீச்சை உற்பத்தி மற்றும் பேரீச்சை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் கூடிய சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே?
தமிழகத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் அரசுக் கல்லூரிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத திமுக அரசு, தருமபுரியில் புதிய வனயியல் கல்லூரி திறக்கப்படும் என்று பொய் கூறி அம்மக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது. விவசாயிகளின் உற்ற தோழன் போல மேடைகளில் வசனம் பேசும் முதல்வரோ, திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி பேரீச்சை பயிரிட்ட தருமபுரி விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா?
நெல், கரும்பு, மாம்பழம், பேரீச்சை, தேங்காய் உள்ளிட்ட எந்த விவசாயிகளும் திமுக ஆட்சியில் நிம்மதியாக இல்லை, மக்களும் பாதுகாப்பாக இல்லை, கல்வித்தரமும் மேம்படவில்லை, சுகாதாரமும் சிறக்கவில்லை, இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இனி மக்களுக்குத் தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் வாயில் வந்த வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றும் திமுகவின் மாயாஜாலம் இனி தமிழக மக்களிடையே எடுபடப் போவதுமில்லை!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் தீப்பிடித்து, வெடித்து சிதறிய சம்பவத்தில், வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்து உள்ளன. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது. இதுதவிர 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 8 பேர் காயம் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. சிலர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே பரபரப்பு; தீப்பிடித்து, வெடித்து சிதறிய கார்
டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர். இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எதற்காக கார் தீப்பிடித்தது. கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இந்த பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தே.மு.தி.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 13-ந்தேதி நடக்க இருக்கிறது என அக்கட்சி அறிவித்து உள்ளது.
பீகாரில் ஜன் சுராஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - பிரசாந்த் கிஷோர்
பீகாரில் ஊழலை ஒழிக்க அதிக அளவிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர். பீகாரில் வெற்றி பெற்று ஜன் சுராஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும், அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். ஒருவேளை தற்போது நடக்கும் என்.டி.ஏ ஆட்சியை மாற்ற விரும்பவில்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகள் மக்களுடன் பயணிப்போம், ஆனால் கூட்டணி ஆட்சியில் இடம் பெற மாட்டோம்.
காங்கிரஸ் எம்பி ராகுலின் வருகை பீகாரில் சட்டசபை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ராகுலுக்கு மாநிலத்தைப் பற்றி தெரியாது. அவர் இங்கு சுற்றிப் பார்ப்பதற்காக மட்டுமே வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் பீகார் மக்கள் ராகுலின் பேச்சைக் கேட்கவில்லை.
மூத்த தம்பதிகளுக்கு கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டம் - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, 2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக்கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்." என அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்டையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற விழாவில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை இன்று (10.11.2025) தொடங்கி வைத்து, 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தார்.
காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த இளைஞர் வெட்டிப் படுகொலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திருச்சி பீமநகரில் கொலையாளிகளால் ஓட ஓட விரட்டப்பட்டு, காவலர் குடியிருப்பில் எஸ்.எஸ்.ஐ. வீட்டில் தஞ்சம் புகுந்த தாமரைச்செல்வன் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதிலாக இருக்கின்றன.
காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பு இல்லாமல் போனதை எப்படி விளக்குவார் இன்றைய பொம்மை முதல்வர்? காவலர் குடியிருப்பில் புகுந்து வெட்டும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது கிஞ்சற்றும் பயம் இல்லாமல் போனதற்கு காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.