அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோயமுத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோளின்படி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அகமதமாபாத் விமான விபத்து: தலைவர்கள் வேதனை
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாயு நாயுடு, முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விமான விபத்து... வேதனை தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
அகமதாபாத் விமான விபத்து குறித்து தகவல் அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாகவும், இது ஒரு நெஞ்சை உலுக்கும் பேரழிவு என்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரமான இந்த தருணத்தில் தேசம் அவர்களுடன் நிற்பதாகவும் ஜனாதிபதி கூறி உள்ளார்.
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. அப்பகுதி முழுவதும் புகையுடன் கூடிய குப்பைகள் பரவியுள்ளன.
அகமதாபாத் விமான விபத்து.. சம்பவம் என குறிப்பிட்டு பின்னர் திருத்திய ஏர் இந்தியா
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதுபற்றி ஏர் இந்தியா நிறுவனம் முதலில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இதை விபத்து என குறிப்பிடாமல் சம்பவம் (Incident)குறிப்பிட்டிருந்தது.
“அகமதாபாத்-லண்டன் காட்விக் வழித்தடத்தில் சென்ற AI171விமானம் இன்று, ஜூன் 12, 2025 அன்று ஒரு சம்பவத்தில் சிக்கியது. இதுபற்றி விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் கூடுதல் தகவல்களை ஏர் இந்தியாவின் இணையதளம் மற்றும் எக்ஸ் தளத்தில் வெளியிடுகிறோம்“ என அதில் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் என்று கூறியதால் இது விபத்தா? அல்லது சதி செயலா? என்ற சந்தேகத்தை எழுப்பியது. அதன்பின்னர் வெளியிட்டுள்ள பதிவில் விபத்து என குறிப்பிட்டிருந்தது. அதில், முழு விவரங்களையும் வெளியிட்டது.
அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டினர் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார். துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கி அனுபவம் வாய்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.
விமான போக்குவரத்து துறை மந்திரிக்கு பிரதமர் அறிவுறுத்தல்
விமானப் போக்குவரத்து துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரித்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருப்பதாக பிரதமரிடம் நாயுடு தெரிவித்தார்.
தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யுமாறும், நிலைமை குறித்து தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய அனைத்து துறைகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றி வருவதாகவும், ஒருங்கிணைந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என்றும் விமான போக்குவரத்து துறை மந்திரியின் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.