பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ராம் மோகன் நாயுடு அகமதாபாத் விரைகிறார். மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக மத்திய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
குஜராத் விமான விபத்து குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என அமித் ஷா கூறி உள்ளார்.
அகமதாபாத் விமான நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
குஜராத்தில் விமான விபத்து
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றியதால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது. விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன ஆனது? என்பது தெரியவில்லை. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
நெல் கொள்முதல் விலை உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நெல் கொள்முதல் விலை சாதாரண ரகத்திற்கு ரூ.131, சன்ன ரகத்திற்கு ரூ. 156 உயர்த்தப்படுவதாகவும், இனி சாதாரண ரகத்திற்கு (குவிண்டால்) ரூ.2,500, சன்ன ரகத்திற்கு ரூ.2,545 கிடைக்கும் என்றும் இதனால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (ஜூன்12) (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 14ம் தேதி கோவை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக - அண்ணாமலை
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “தி.மு.க. அளித்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை.. பெட்ரோல் விலையேற்றத்தில் மத்திய அரசின் பங்கு ஏதும் இல்லை.
தமிழ்நாடு கொடுத்த ஒவ்வொரு பணத்துக்கும் மத்திய அரசு திரும்ப கொடுத்துள்ளது” என்று அவர் கூறினார்.
பொன்முடி ஆஜராக விலக்கு..? - ஜூன் 21ம் தேதி உத்தரவு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீது வரும் 21ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை சிபிஐ சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ரூ.1,649 கோடியில் புதியத் திட்டப் பணிகள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சேலம் மாவட்டத்தில் ரூ.1,649 கோடியில் புதியத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி - திடுக்கிடும் தகவல்
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.