இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் தீப்பற்றி எரியும் காட்சி
குஜராத் விமான விபத்து: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இரங்கல்
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த துயரமான விமான விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு மனமுடைந்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
“இந்த கோரமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். தொடர்ந்து நிலைமையை கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அவசரகால மீட்பு குழுவினருடன் துணை நிற்கிறோம்” என மார்கோ ரூபியோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.1 கோடி- டாடா குழும தலைவர் அறிவிப்பு
அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் டாடா நிறுவனம் ஏற்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
விமான விபத்து: வெளிநாட்டினருக்காக கூடுதல் ஹாட்லைன் எண் அறிவிப்பு
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய விமானத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் பயணம் செய்தனர். எனவே, அவர்களின் உறவினர்கள் அணுகுவதற்காக ஏர் இந்தியா சார்பில் கூடுதல் ஹாட்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1800 5691 444 என்ற பிரத்யேக ஹாட்லைன் எண்ணுடன் கூடுதலாக, வெளிநாட்டினருக்காக +91 8062779200 என்ற மற்றொரு ஹாட்லைன் எண்ணை சேர்த்துள்ளதாக ஏர் இந்தியா கூறி உள்ளது.
அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 204 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.
விமான விபத்து: மீட்பு பணியில் 130 ராணுவ வீரர்கள்
இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவுவதற்காக சுமார் 130 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவ குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. குப்பைகளை அகற்றுவதற்காக ஜேசிபி-களுடன் கூடிய பொறியியல் குழுக்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுக்கள், விரைவு நடவடிக்கை குழுக்கள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் தண்ணீர் டேங்கர்களுடன் கூடிய தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் கள மேலாண்மைக்கான பணியாளர்கள் ஆகியோர் இந்த குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். ராணுவ மருத்துவமனையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் டேக்ஆப் ஆன சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விமானத்தில் பயணித்த யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் கூறியிருக்கிறார்.
‘விபத்தில் யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை’ என ஏ.எஃப்.பி. செய்தியை மேற்கோள் காட்டி அவர் கூறியிருக்கிறார். சில அலுவலகங்கள் இருந்த குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததால் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன என்று அவர் கூறியிருக்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லியில் இருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார்.
அகமதாபாத்தின் மெகானிநகர் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் விடுதியின் மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. எனவே, அந்த கட்டிடத்தில் இருந்த பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அரசு முறையான விசாரணை நடத்தி தனது பொறுப்பை நிறைவேற்றும் என நம்புவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.