ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தாய்லாந்தின் புகேட்டில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தாய்லாந்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
முன்னதாக ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திமுக நிர்வாகிகளுடன் தொகுதிவாரியான ஆலோசனையை தொடங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக நிர்வாகிகளுடன் தொகுதிவாரியான one to one ஆலோசனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். இதன்படி இன்று விழுப்புரம், சிதம்பரம், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பொன்முடி வழக்கு: தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
தென்காசி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எட்டயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரியின் பின்பக்கம் கார் மோதிய விபத்தில் சிக்கி காரில் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் பயணம் செய்த தஞ்சை மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பும் போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் சிக்கி நீதிபதியின் பாதுகாவலர் மற்றும் அவரது உறவினர் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கீழடி விவகாரம்: ஜூன் 18ம் தேதி திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்
கீழடி ஆய்வை வெளியிட மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஜூன் 18ஆம் தேதி மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலையில் திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அகமதாபாத் விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை
நேற்றைய விமான விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஆகமதாபாத் விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறார்.
விமான விபத்தில் சதித் திட்டத்திற்கான முகாந்திரம் இல்லை - மத்திய அரசு தரப்பு
ஆகமதாபாத்தில் 241 பேர் உயிரிழந்த விமான விபத்தில் சதித் திட்டத்திற்கான முகாந்திரம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகமதாபாத் போலீசாரின் விசாரணைக்கு உதவ என்.ஐ.ஏ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் முகாமிட்டுள்ளது என்றும், புறப்பட்ட 30 நொடிகளில் விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணம் இதுவரை உறுதியாகவில்லை என்றும் மத்திய அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
"இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்" - விஜய் வேண்டுகோள்
3ம் கட்ட கல்வி விருது விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்.. உங்களது நிலைக்கு உதவிய ஆசிரியர்கள் பள்ளியை குறித்து பேசுங்கள், மற்றவற்றை குறித்து பேச வேண்டாம். பெற்றோர்கள், மாணவர்கள் 2026 தேர்தல் பற்றி மேடையில் பேச வேண்டாம்
அனைவரையும் தனித்தனியே சந்திக்கிறேன். ஆனால் பேச்சை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி: "அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.." - விஜய்
கல்வி விருது விழா தொடங்குவதற்கு முன்னர் நேற்று ஆமதாபாத்தில் உயிரிழ்ந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “குஜராத் ஆகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.. சில வீடியோக்கள், போட்டோக்களை பார்க்கும்போது மனம் பதறுகிறது.. அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை” என்று கூறினார்.