வரலாறு காணாத அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,295-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அகமதாபாத் விமான விபத்து: பிரதமர் மோடி ஆய்வு
குஜராத் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். விமானம் உருக்குலைந்து கிடக்கும் இடத்தில் நடக்கும் மீட்புப் பணிகளை பிரதமர் பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து விமான விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் மோடி அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சந்தித்து வருகிறார்.
பிரதமருடன் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.
மெட்ரோ பாலம் விபத்து - போக்குவரத்தில் மாற்றமில்லை - காவல்துறை அறிவிப்பு
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கட்டுமானம் இடிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் (42) என்பவர் உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து சாலையை சரி செய்யும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் போரூரில் இருந்து சென்னை சின்னமலை வரும் சாலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் விபத்து நடந்த சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும், கனரக வாகனங்களுக்கு மட்டும் 2 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து நடந்த சாலையில் 11 மணிக்கு மேல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ விபத்து: ஒருவர் பலி - விசாரணை நடத்தப்படும் என நிர்வாகம் தகவல்
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கட்டுமானம் இடிந்து விழுந்தது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் ஒரு வாரத்திற்குமுன் அமைக்கப்பட்ட இரு தூண்கள், இணைப்பு பாலம் சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டதாகாவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று மெட்ரோ தூண்கள் சரிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் (42) என்பவர் உயிரிழந்தார்.
அகமதாபாத் விமான விபத்து: உயர்மட்டக் குழு அமைப்பு
அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
இதனைத்தொடர்ந்து சர்வதேச நெறிமுறைகளின்படி விமான விபத்து விசாரணை பணியகம் விசாரணையை தொடங்கி உள்ளது.
விமானப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் விபத்துகளை தடுக்கவும் குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகிகளை சந்திக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், ஜூன் முதல் வாரத்தில் 'ஒன் டூ ஒன் பேசுவோம்' எனக் கூறியிருந்த நிலையில், இன்று முதற்கட்டமாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற உள்ளது.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் உள்நாட்டுப் படை அளிக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
அகமதாபாத்தில் நேற்று ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில், விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை இன்று பார்வையிட உள்ள பிரதமர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திந்து ஆறுதல் கூற உள்ளார்
திரிவிக்ரம் - ராம் சரண் படம் குறித்து பரவும் தகவல்: தயாரிப்பாளர் மறுப்பு
இயக்குனர் திரிவிக்ரம், ராம் சரணுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் பவன் கல்யாண் தனது பவன் கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் பேனரில் கீழ் வழங்க உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு
இந்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி சங்கர்கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் மேலும் ஒரு மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.