இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சென்னை திருவொற்றியூரில் ரூ.272 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி துறைமுகத்தை வரும் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சேகர்பாபு அங்கு ஆய்வு செய்தனர். நிர்வாக கட்டடம், வலை பாதுகாப்பு கட்டடம், அலை தடுப்பு வார்ப்புகள் மற்றும் படகு நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு அதிகாரம்: இடைக்காலத்தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் அதிகாரிகளிடம், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. டாஸ்மாக் அதிகாரிகள் ஜோதி சங்கர், சங்கீதா இருவரிடமும் 6 மணி நேரமாக தனித்தனியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றனர்.
கர்நாடக மாநிலம் சந்தாபுரம் பகுதியில் சூட்கேசில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரெயில்வே மேம்பாலத்திற்கு அருகே சூட்கேசில் இருந்த இளம்பெண் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள சகோதரர் ராகுல் காந்தி, மாநிலங்களின் உரிமைகளையும் இந்தியாவின் கூட்டாட்சி உணர்வையும் பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர்: நாடு என்று வரும்போது யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது - கனிமொழி எம்.பி.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விளக்கம் அளிக்க செல்லும் முன்பு கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் - திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி சந்திப்பு
இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று, நான் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து, செங்கல் மீதான ஜி.எஸ்.டி.யை அவசரமாகக் குறைக்கவும், ஐடிசி இல்லாமல் 3 சதவீதம் மற்றும் ஐடிசியுடன் 5 சதவீதம் ஆகியவற்றை முன்மொழியவும், பர்னர் பயன்பாட்டின் அடிப்படையில் கூட்டு வரியை அறிமுகப்படுத்தவும் கோரிக்கை விடுத்தேன், இதனால் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல் அலகுகள் மற்றும் மில்லியன் கணக்கான கிராமப்புற வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை மறுநாள் எந்தெந்த பகுதியில் மின் தடை..?
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் 23.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - மா.சுப்பிரமணியன்
அமெரிக்கா- கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற மனநல சர்வதேச மாநாட்டில் ‘நாள்தோறும் மேற்கொள்ளப்படும் நடைபயிற்சியால், உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் தாக்கம்’ குறித்த தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றினார்கள்.