மதுரையின் வளர்ச்சிக்கு எதிராக போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெறிவோம் - மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
எய்ம்ஸ்-ம் வராது, மெட்ரோ ரெயிலையும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்... அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்!”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்
டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 'மிகவும் மோசமான' பிரிவில் தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் என்ற செயலி வெளியிட்ட அறிக்கையின்படி இன்று காலை 9 மணிக்கு டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 370-ஆக பதிவாகி உள்ளது. இதனால் டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது. சாந்தினி சவுக், ஆனந்த் விகார், முன்ட்கா, பவானா, நரேலா, வஜீர்பூர் உள்பட18-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரக்குறியீடு 400-க்கு மேல் பதிவாகி உள்ளன.
எஸ்.ஐ.ஆரை செயல்படுத்தி எதிர்காலத்தில் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் ஆபத்து இருக்கிறது - கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி. கூறியதாவது:- திமுக தொடர்ந்து மாநில உரிமைகளுக்காக அண்ணா, கலைஞர் முதல் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு இயக்கமாக இருக்கிறது. குறிப்பாக, சொல்ல வேண்டும் என்றால் மத்திய பாஜக ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து, ஒவ்வொரு மசோதாவின் வழியில் வாய்ப்புகள் கிடைக்கிறதோ அந்தந்த வழிகளில் மாநில உரிமைகளை பறிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.
மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதி பகிர்வை சரியாக தருவதில்லை. மாநிலங்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகள், தற்போது மதுரை, கோவைக்கு மெட்ரோ திட்டம் கேட்கப்பட்டது வரை நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி பல வகைகளில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். நமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக போராடுவோம்.
எஸ்.ஐ.ஆரை கொண்டு வந்து, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அங்கு இருக்கக்கூடிய வாக்காளர்களின் வாக்குரிமையை பறித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அவசர கதியில் எஸ்.ஐ.ஆரை செயல்படுத்த வேண்டிய அவசியமே இல்லாத காலத்தில் இதை செயல்படுத்துகின்றனர். இதன் மூலம் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கவும். எதிர்காலத்தில் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் ஆபத்தும் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் உணவுத் திருவிழா - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
இந்தியாவின் பல்வேறு மாநில சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவுத் திருவிழாவை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 22-ந்தேதி (நாளை) மதுரை, தமுக்கம் மைதானத்தில் தொடங்கி வைக்கிறார்.
`ஜனநாயகன்'- விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு
எச்.வினோத் இயக்கி வரும் ‘ஜனநாயகன்’ ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இன்று (21-11-2025) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேற்கண்ட தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரோடு ஷோ: வரைவு அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, ஊர்வலங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகளின் வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு, ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மனுதாரர்களாக உள்ள அதிமுக, த.வெ.க., தேசிய மக்கள் சக்தி கட்சிகளுக்கு இதன் நகலை வழங்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோட்டு உத்தரவிட்டுள்ளது.
வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக பாஜக ஆலோசனை கூட்டம்
எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக சென்னையில் பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நெல்லையில் நடக்கும் நிகழ்ச்சிக்காக சென்றுள்ளதால் கூட்டத்தில்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கவில்லை.