ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட்டு
ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு பிரமோத்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. செப்டம்பரில் ஓய்வுபெறும் நிலையில் மனுதாக்கல் செய்துள்ளதால் இதனை ஏற்க முடியாது என தலைமை நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை
தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
வார விடுமுறை வழங்க, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
கூவத்தூரில் நாளை நடைபெறும் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. பனையூர் பாபு தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி, ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையீடு செய்தனர். மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் அருனித் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என எம்.எல். ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை அருகே அதிர்ச்சி: நாய் கடித்து 7 வயது சிறுமி படுகாயம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அயன் சிங்கம்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை நாய் கடித்த சம்பவத்தில் அவளுக்கு படுகாயம் ஏற்பட்டது.
நெற்றி, வாய்ப் பகுதியில் காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வந்தே பாரத் உணவு குடோனில் தீ விபத்து - 6 பேர் படுகாயம்
நெல்லை - பாலபாக்கிய நகரில் இயங்கி வந்த வந்தே பாரத் ரெயிலுக்கு உணவு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்தில் சமையல் மாஸ்டர் உள்ளிட்ட 6 பேர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆளுமை மிக்க தலைவர்களோடு விஜய் தன்னை ஒப்பிடுவதை ஏற்க இயலாது: செம்மலை பதிலடி
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், அதிமுக குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.
இந்தநிலையில் விஜய்க்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாவது:-
கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் கோபுரம் ஆகிவிடாது, கட்சி ஆரம்பித்த உடனே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது அதீத ஆசை. அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற ஆளுமை மிக்க தலைவர்களோடு விஜய் தன்னை ஒப்பிடுவதை ஏற்க இயலாது. அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“முதல்-அமைச்சரை விமர்சித்த விஜய்யின் தராதரம் அவ்வளவு தான்” - அமைச்சர் கே.என் நேரு காட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தது குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் திருச்சியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, “அவரது தராதரம் அவ்வளவு தான். ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர், பெரிய கட்சி தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார். நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு அவரை அப்படி சொல்வது தரம் தாழ்ந்த செயல். மக்கள் நல்ல பதில் சொல்வார்கள். நாங்களும் தேர்தலில் நல்ல பதில் சொல்வோம். அதில் ஒன்றும் மாற்றமில்லை. 10 பேர், 50 பேர் கூடிவிட்டார்கள் என்பதற்காக மாநில முதல்-அமைச்சரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எவ்வாறு சரியாக இருக்கும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கே.ஒய்.சி. (KYC) இணைப்பு தொடர்பான தகவலில் உண்மை இல்லை - மத்திய அரசு விளக்கம்
மத்திய அரசு அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜன்தன் வங்கி கணக்கில் KYC இணைக்கவில்லையெனில் கணக்குகள் மூடப்படும் என்ற தகவலில் உண்மை இல்லை.
KYC இணைக்கப்பட வேண்டியது அவசியம் என்றாலும் KYC புதுப்பிக்கப்படாவிட்டாலும் வங்கி கணக்குகள் மூடப்படாது.
ஜன்தன் வங்கி கணக்குகளின் KYC இணைப்பு குறித்து பரவி வரும் தகவல்கள் உண்மையில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் 5-வது நாளாக நீடிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 5-வது நாளாக நீடித்து வருகிறது. காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேலும் 14 "நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. அதனடிப்படையில், நாளை (சனிக்கிழமை) ஆலந்தூர் மண்டலம், ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.