அமிர்தசரசில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் காயம்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மஜிதா சாலையில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மர்ம பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மர்மபொருள் வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் மர்ம பொருள் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
நடைபோட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீரர்
தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகள போட்டியின், நடைபோட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செர்வின் வெண்கலம் வென்றார். 1 மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கி.மீ இலக்கை கடந்து அசத்தி உள்ளார்.
பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடியில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை.. ஆர்ப்பரிக்கும் பவானி ஆறு
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறு, கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மாயாறு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
இந்தநிலையில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழையால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
100 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி 4 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் பில்லூர் அணைக்கு வினாடிக்கு 13,425 கனஅடி நீர் வரும் நிலையில், அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
உதகையில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்
உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, உதகை, பைக்காரா படகு இல்லம் என அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி மூடப்பட்டுள்ளது.அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம், டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது.
போலீசாரின் அத்துமீறிய செயலால் குழந்தை பலி
கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை போலீஸ்பிடித்து இழுத்ததால் பைக்கில் இருந்த மூன்று வயது குழந்தை கீழே விழுந்து பலியானது. போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தையின் பெற்றோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் ஆபத்தான பகுதியில் குளிக்கத் தடை
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஆபத்தான பகுதியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தடுப்பு வேலி உள்ள இரு பகுதிகளில் மட்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேருக்கு பிரதமர் மோடி அஞ்சலி
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். எக்ஸ் தள பதிவில்,"நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார். 1947 ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1964 இல் அவர் இறக்கும் வரை இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் நேரு என்பது குறிப்பிடத்தக்கது.
வினாத்தாள் கசிவு: பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு
வினாத்தாள் கசிந்ததால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளிலும் இன் டஸ்ட்ரியல் லா பாடத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்டஸ்ட்ரியல் லா பாடத்தேர்வுக்காக அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்பப்பெறும் பணி நடைபெறுகிறது. வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,960 ஆக உயர்ந்துள்ளது. 1 கிராம் ரூ.44 உயர்ந்து ரூ.8,995க்கு விற்பனையாகிறது.