எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் தேர்வு குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவுக்கு 2 இடங்கள் கிடைக்கும் நிலையில், தேமுதிக கோரியபடி ஒரு இடம் வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வளர்த்த கடா மார்பில் எட்டி உதைத்தது - ராமதாஸ் புகார்
மன உளைச்சலில் இருந்ததாக அன்புமணி பேசியது குறித்து தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மக்களையும் கட்சியினரையும் திசைதிருப்பி அனுதாபம் பெற அன்புமணி முயற்சி செய்கிறார்.கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்திய கட்சியில் கலகத்தை அன்புமணி ஏற்படுத்தினார். இனிப்பை தவிர்த்து கசப்பான மருந்தைத்தான் பதிலாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வளர்த்த கடா மார்பில் எட்டி உதைத்தது.
கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்துள்ளார். அழகான ஆளுயர கண்ணாடியான கட்சியை ஒரு நொடியில் உடைத்தது யார்? புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில் மேடை நாகரீகம் இல்லாமல் செயல்பட்டது யார்? ஏதோ போகிற போக்கில் இதை நான் சொல்லவில்லை. ஆதாரங்களுடன் தான் சொல்கிறேன் என்றார்.
அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம்
திருவாரூர், நன்னிலம் அருகே அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் எடுத்துச்சென்ற நபர் கைது செய்யப்பட்டார். கீரனூர் சோதனை சாவடியில், அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டபோது ஹவாலா பணம் எடுத்துச்செல்வது தெரியவந்தது.
நடிகர் ராஜேஷ் காலமானார்
பிரபல திரைப்பட நடிகரும், பன்முகத்திறமையாளருமான நடிகர் ராஜேஷ் காலமானார் அவருக்கு வயது 75. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ராஜேஷ். கே.பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பாலகுரு இயக்கிய கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் கதாநாயகனாக ராஜேஷ் நடித்துள்ளார்.
அந்த 7 நாட்கள், பயணங்கள் முடிவதில்லை, அச்சமில்லை அச்சமில்லை, இருவர், சிட்டிசன், உள்ளிட்ட படங்களிலும் பல்வேறு தமிழ்த்தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடிகர் ராஜேஷ் நடித்து வந்துள்ளார். 1949-ல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த ராஜேஷின் குடும்பம் தஞ்சையில் வசித்தது.
தங்கம் விலை சற்றுக்குறைவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து சவரன் ரூ.71,180க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ 40 குறைந்து கிராம் ரூ.8,895க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீ விபத்து-துரித நடவடிக்கை எடுத்துள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு
சென்னை வியாசர்பாடி தீ விபத்து தொடர்பாக துரித நடவடிக்கை எடுத்துள்ளோம். 24 குடும்பங்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளோம். தீ விபத்தில் சிறுகாயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
மியான்மர் நாட்டில் அதிகாலை 5.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது
வங்கக்கடலில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேற்கு வங்கம்-வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாகர் தீவுகள்-கேப்புபுராவிற்கு இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என தெரியவந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் நியமனம்
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த, தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 200 கருத்தடை டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கு கறுத்தடை அறுவை சிகிச்சை செய்வதுடன், வெறிநோய் தடுப்பூசியும் செலுத்த கால்நடைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த பணிகளை வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
5வது நாளாக குளிக்க தடை
தென்காசியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குற்றால அருவியில் குளிக்க 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.