இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 29 May 2025 8:16 PM IST
உலகளவில் மே 11 வரையிலான 28 நாட்களில் 91,583 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் மே 28-ந்தேதி வரையில் 1,009 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் கேரளா (430), மராட்டியம் (209) மற்றும் டெல்லி (104) ஆகியவை அதிக பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இதேபோன்று பஞ்சாப், கர்நாடகா, தமிழகம், குஜராத்திலும் தொற்று அதிகரித்து வருகிறது.
தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று சமீப வாரங்களாக அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. இந்தியா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்றுகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால், சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காணிப்பு முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
- 29 May 2025 7:18 PM IST
வாணியம்பாடியில் பல் சிகிச்சையின்போது ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் 8 பேர் பலியானார்கள். இதனை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
- 29 May 2025 7:06 PM IST
ஐ.பி.எல். தகுதி சுற்று 1 போட்டியில், பஞ்சாபிற்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
- 29 May 2025 6:58 PM IST
சென்னை, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் துணிகளை துவைப்பதற்காக வீட்டில் உள்ள வாஷிங் மெஷினில் அதிகளவிலான துணிகளை போட்டு ஆன் செய்துள்ளார்.
இதனால் வாஷிங் மெஷினில் இருந்து புகை வந்தது. இதனையடுத்து வாஷிங் மெஷின் உடனடியாக வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 29 May 2025 6:25 PM IST
தமிழை, கன்னட மொழியின் தாய் என கமல் கூறிய நிலையில், அதனை ஏற்க முடியாது என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கூறியுள்ளார். கமல்ஹாசன் நாளைக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடகாவில் `தக் லைஃப்' வெளியாகாது. கமல் என்ன விளக்கம் கூறினாலும் ஏற்க மாட்டோம், கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் அறிவித்து உள்ளார்.
- 29 May 2025 6:04 PM IST
7-வது மாநில நிதி ஆணையம் அமைப்பு; தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் 7-வது மாநில நிதி ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதிகாரி அலாவுதீன் தலைமையில் மொத்தம் 6 பேர் கொண்ட குழுவினர் செயல்படும் வகையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமையை ஆய்வு செய்து, மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வு பற்றி அரசுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவார்கள்.
- 29 May 2025 5:18 PM IST
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திண்டுக்கல், நாமக்கல், சேலம், திருச்சி, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 29 May 2025 4:17 PM IST
கேரளாவில் கொச்சி அருகே சரக்கு கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்பு, மூழ்கி விபத்தில் சிக்கியிருந்தது.
இந்நிலையில், கப்பலில் இருந்த கண்டெய்னரில் இருந்து, ரசாயன பொருட்கள் கடலில் கலக்க தொடங்கியுள்ளன. இதனால், கேரள அரசு இதனை பேரிடராக அறிவித்து உள்ளது.
- 29 May 2025 3:42 PM IST
அன்புமணி தலைமையில் நாளை பாமக நிர்வாகிகள் கூட்டம்?
ராமதாஸை தொடர்ந்து பாமக நிர்வாகிகளுடன் நாளை அன்புமணி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோழிங்கநல்லூரில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அன்புமணி சந்திக்க இருப்பதாகவும், அன்புமணி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை ராமதாஸ் வீசிய நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.