இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
வந்தே பாரத் ரெயில்களில் அசைவ உணவு ரத்தா..? - ரெயில்வே விளக்கம்
வந்தே பாரத் ரெயில்களில் அசைவ உணவு வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டதாக பரவும் தகவலுக்கு ரெயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபாலன் பா.ஜ.க.வில் இணைந்தார்
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபாலன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இன்று (சனிக்கிழமை) அக்கட்சியில் இணைந்தார்
10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர்: சிசுவின் விரல் துண்டிப்பு விவகாரம் - வழக்குப்பதிவு
வேலூர் அரசு மருத்துவமனையில் விமல்ராஜ்-நிவேதா தம்பதியின் 6 நாள் ஆண் சிசுவின் கையில் பிளாஸ்டரை அகற்றியபோது கட்டைவிரலை துண்டித்த செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செவிலியர் அருணா தேவி குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அவர் மதியம் 1.05 மணிக்கு மதுரைக்கு வந்தடைந்து உள்ளார்.
இந்நிலையில், அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் திருமலை நாயக்கர் சிலை வரை 22 கி.மீ. தொலைவிலான ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக, அவர் புறப்பட்டு உள்ளார். முடிவில், முன்னாள் மேயர் முத்து சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 4*100 ரிலே ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்று அசத்தி உள்ளது. 43.86 வினாடிகளில் இலக்கை எட்டிய இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. 43.28 வினாடிகளில் இலக்கை எட்டிய சீன அணிக்கு தங்கம் கிடைத்துள்ளது. இதில், இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை அபிநயா ராஜராஜன் (வயது 18) கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மிரட்டல் விடும் மர்ம நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் முதல் முன்-பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆண்டு கர்நாடகாவில் மழைப்பொழிவு அதிகரித்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.
கர்நாடகாவில் ஏற்பட்ட இந்த அதிக அளவிலான மழைப்பொழிவால், 67 பேர் பலியாகி உள்ளனர். அனைத்து 31 மாவட்டங்களிலும் இயல்புக்கும் கூடுதலாக மழை பெய்துள்ளது. வெள்ளம் அல்லது நிலச்சரிவால் மொத்தம் 2,252 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 1,702 வீடுகள் சேதமடைந்து உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 மாதத்தில் இயல்பை விட
97% அதிகமாக கோடை மழை பெய்துள்ளது. கடந்த 3 மாதத்தில் சென்னையில் மட்டும் இயல்பை விட 12% அதிகமாக கோடை மழை பெய்துள்ளது என வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்து உள்ளார்.