இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தல்
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அதில் இருந்து இரு அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இதில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் சீனாவை (4-3) போராடி வென்றது. இதனையடுத்து இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் இன்று மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன் சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை
காசா நகரில் நேற்றில் இருந்து இதுவரை 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் ஆயுத பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபெய்டா இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டு உள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ் இன்று அறிவித்து உள்ளார்.
காசா நகரில் இஸ்ரேல் புதிய ராணுவ நடவடிக்கையை தொடங்கிய நிலையில், கடந்த வெள்ளி கிழமை ஒபெய்டா கடைசியாக அறிக்கை வெளியிட்டார்.
21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிரமாண்ட ஊர்வலம்.. விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு குழுவினர் மற்றும் அந்தந்த பகுதி சங்கங்கள் சார்பிலும் பொது இடங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர். இதேபோல் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். பின்னர் அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. முதல் நாளில் இருந்தே சிலைகள் கரைக்கப்படுகின்றன.
இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்படுகின்றன. பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிரமாண்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன.
குற்றாலம் மெயின் அருவியில் 2 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி; அலைமோதிய கூட்டம்
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மழை குறைந்ததால் இன்று காலை குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானது. குற்றாலம் மெயின் அருவியில் 2 நாட்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டது.
8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அட்டை - தேர்தல் ஆணையம் திட்டம்
பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு பிறகு அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் புதிய அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையத்தால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
எனவே, புதிய புகைப்படம் வாக்காளர்களின் பதிவுகளை புதுப்பிக்கவும் புதிய வாக்காளர் அட்டைகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 125-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.
இதில் பருவமழையை குறிப்பிட்டு அவர் பேசும்போது, இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன. வீடுகளை சேதப்படுத்தி விட்டன. வயல்வெளிகள் நீரில் மூழ்கி போயுள்ளன. குடும்பங்கள் மொத்தமும் பாதிக்கப்பட்டு உள்ளன என கூறினார்.
நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் செப்.6ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.