போக்குவரத்து நெரிசல்: போலீஸ்காரர் வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம்- பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு

புதுக்கோட்டை மாநகரின் மையப்பகுதியான கீழ ராஜ வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;

Update:2025-06-29 04:46 IST

புதுக்கோட்டை மாநகரின் மையப்பகுதியான கீழ ராஜ வீதியில் நேற்று முன்தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நிறுத்தக்கூடாத இடத்தில் ஒரு கார் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது. பொதுமக்கள் சத்தம் போட்டும் அந்த காரில் இருந்த டிரைவர் வாகனத்தை விட்டு இறங்காமல் இருந்ததோடு, வாகனத்தை நகர்த்தாமலும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் காயத்ரி பாய் விரைந்து வந்தார். 'நோ பார்க்கிங்கில்' வாகனம் நிறுத்தியதற்கும், வாகனத்தை நகர்த்தாமல் இருந்ததற்கும் என 2 பிரிவுகளில் அந்த வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்தார். அந்த காரில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் இருந்தபோதிலும் தனது கடமையில், கருத்தாக செயல்பட்டு பெண் போலீஸ் அபராதம் விதித்ததுடன் அந்த காரை உடனடியாக நகர்த்தவும் நடவடிக்கை எடுத்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதில் அந்த பெண் போலீசுக்கு பாராட்டுகள் குவிகிறது. சம்பந்தப்பட்ட கார், புதுக்கோட்டை அருகே ஒரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரரின் சொந்த வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்