திமுகவை பற்றி பேசி விஜய் அடையாளம் தேடிக்கொள்கிறார் - கனிமொழி எம்பி பதிலடி
யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை பற்றிப் பேசினால் தான் அவர்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்கும் என்பது மிகத் தெளிவான ஒன்று என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.;
கன்னியாகுமரி,
2026 சட்டசபை தேர்தல் முன்னோட்டமாக தவெக தலைவர் விஜய், சனிக்கிழமை அன்று தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார். திரளான தொண்டர்களுக்கு மத்தியில் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "மக்களோடு மக்கள் கடலோடு இருப்பதால் நம்மைப் பற்றி கன்னாபின்னாவென பேசுகிறார்கள். நான் மரியாதையாக பேசினால் கூட தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், அண்ணா சொன்ன பஞ்ச் தான். வாழ்க வசவாளர்கள். நம்மை மோசமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜ அரசையும், திமுக அரசையும் கேள்வி கேட்க வந்துள்ளேன்.
முக்கால்வாசி வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல், எல்லாத்தையும் நிறைவேற்றி விட்டோம் என்று கதை விடுகிறீர்களே மை டியர் சிஎம் சார்? ரீல்ஸ் வேற, ரியாலிட்டி வேற என்று சொல்லி விட்டு, நீங்களே இப்படி ரீல்ஸ் விடுறீங்களே. அப்படி விட்டதில் பாதி ரீல் அறுந்தும் போய்விட்டது. முந்தா நேற்று வரையில் ஒன்றிய பிரதமர், இன்று இந்திய பிரதமர். பிளேட்டை மாற்றி பேசுவதில் நம்ம முதல்வர் ரொம்ப புத்திசாலி. இப்போது புரிகிறதா மக்களே, மறைமுக உறவுக்காரர்கள் என்று நாம் ஏன் சொல்கிறோம் என்று." என்று விமர்சித்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் திமுக எம்.பி.கனிமொழி. அப்போது, தவெக தலைவர் விஜய் திமுக மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வைத்து வருவது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "யார் அரசியலுக்கு வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிப் பேசினால் தான் அவர்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்கும் என்பது மிகத் தெளிவான ஒன்று. அதனால் எல்லோரும் திமுகவை தான் விமர்சனம் செய்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.