விஜய் சுதந்திரமாக பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு செல்வப்பெருந்தகை வேண்டுகோள்
த.வெ.க. தலைவர் விஜய், சுதந்திரமாக பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.;
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், பா.ஜனதா அரசு மற்றும் தேர்தல் கமிஷனின் வாக்குத்திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் கையெழுத்து வாங்கினார்.
பின்னா் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
.ஜி.எஸ்.டி. குறைப்பால் மக்கள் பயன் அடைந்துள்ளதாக கூறுவது பொய். குழந்தைகளுக்கு எந்த மொழி தேவையோ, அதை அவர்கள் படித்துக்கொள்வார்கள். யாரும் மொழியை திணிக்க வேண்டாம். சென்னை தி.நகரில் இந்தி பிரசார சபா இருக்கிறது. அதை யாராவது பூட்டினார்களா?.
புதிய தேசிய கல்விக்கொள்கையில், ‘செருப்பு தைத்தவன் செருப்பு தைக்க வேண்டும், முடிவெட்டுபவன் முடி வெட்ட வேண்டும்’ என்று சொல்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதுதான் பிரச்சினை. இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழகத்துக்கு தர வேண்டியை நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம். கருத்து சொல்லலாம். தமிழ்நாடு அரசுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், த.வெ.க. தலைவர் விஜய்யை சுதந்திரமாக விட்டுவிடுங்கள். அவர் பிரசாரம் செய்யட்டும். பேசட்டும். என்ன பேசுகிறார் என்று பார்க்கலாம்.
மத்தியிலும், மாநிலத்திலும் நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இல்லை. எனவே விஜய் எங்களை விமர்சிக்க முடியாது. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி ஒரு இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி.
இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.