மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.2,629 கோடி மானியத்தை விடுவிக்க கோரினோம் -அமைச்சர் சக்கரபாணி பேட்டி
12 சதவீத ஜிஎஸ்டி வரியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.;
சென்னை,
புதுடெல்லியில் நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அவர்களை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் சந்தித்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூபாய் 2670.64 கோடி நிலுவை நிதியை உடனடியாக வழங்கவும், நியாய விலைக் கடைகளில் எடைபோடும் இயந்திரத்தை கை விரல் ரேகை பதிவு செய்யும் கருவியுடன் இணைத்து பொருட்கள் வழங்குவதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்படும் காலதாமதத்தை தவிற்கும் வகையில் நடவடிக்கை எடுத்திடவும், இணைப்பு முறையை அமல்படுத்திட 31.03.2026 வரை கால நீட்டிப்பு வழங்கவும், தமிழ்நாட்டிற்கு இந்திய உணவுக் கழகம் வழங்கும் அரிசியினை முழுவதுமாக புழுங்கல் அரிசியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத் தொகுப்பில் இருந்து வழங்கவும், தமிழ்நாட்டில் இருந்து 2024-25 காரிப் பருவக் கொள்முதல் அளவை 16 இலட்சம் டன்னிலிருந்து 19.24 லட்சம் டன்னாக உயர்த்திடவும், ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, திருச்சி சிவா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்ய பிரத சாகு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் மோகன்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் முருகேஷ்ஆகியோர் உடனிருந்தனர்.
டெல்லியில் மத்திய உணவுத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியை சந்தித்த பின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு ரூ.2,629 கோடி மானியத்தை விடுவிக்க மத்திய உணவுத்துறை மந்திரியிடம் கோரினோம். 12 சதவீத ஜிஎஸ்டி வரியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை 5 சதவீதமாக குறைக்க கோரியுள்ளோம்.
மாநில அரசு ரூ,31, மத்திய அரசு ரூ.31 கோடி ஊக்கத்தொகையை தரும்படி கேட்டிருக்கிறோம். மாநில அரசு, மத்திய அரசு பாதி என விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தர அமைச்சரிடம் கோரினோம். தமிழகத்தில் 3.74 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. 1 லட்சம் மெட்ரிக்டன் பற்றாக்குறை உள்ளது. பற்றாக்குறை அரிசியை ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து கொள்முதல் செய்கிறோம். தமிழக மக்கள் விரும்பி சாப்பிடும் சன்ன ரக அரிசியை வழங்க வேண்டுமென மத்திய மந்திரியிடம் கோரினோம்.
மாங்கூழ் கொள்முதல் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டிஅதை உயர்த்தக்கோரியுள்ளோம். ஏற்கனவே ஆந்திராவில் அறிமுகப்படுத்திய நடைமுறையை தமிழகத்தில் அமல்படுத்த கோரியுள்ளோம்.கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, வேலூர், திண்டுக்கல் மா உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிலோ ரூ.20க்கு விற்ற மாம்பழம் இந்தாண்டு ரூ.5க்கு விற்பனையாகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகார் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.