தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த வெல்டிங் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 2023-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.;

Update:2025-10-29 20:33 IST

தேனி,

தேனி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 29 வயது வாலிபர். அவர், வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய சித்தப்பா மகளான 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். அவர் தனது தங்கை உறவுமுறை என்று தெரிந்தும், அவருக்கு அந்த தொழிலாளி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

பின்னர் அந்த சிறுமியை மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார். ஆனால், அவர் இதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அவருடைய தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த போது சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

சிறுமிக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 2023-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தேனி அனைத்து மகளிர் போலீசார் அங்கு சென்று சிறுமியிடம் விசாரித்தனர். சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின்பேரில் அந்த தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரக்சிதா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவில் அந்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதமும் அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கணேசன் நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து அந்த தொழிலாளியை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்