வீட்டில் கஞ்சா விற்பனை செய்த கணவனை போலீசில் பிடித்துக் கொடுத்த மனைவி

போதை பழக்கத்திற்கு அடிமையான ராஜாவுக்கு, நண்பர்கள் மூலம் கஞ்சா பயன்படுத்தும் பழக்கமும் ஏற்பட்டுள்ளது.;

Update:2025-08-28 14:49 IST

கோப்புப்படம் 

சென்னை திருவொற்றியூர் ரேடியன்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜா (28 வயது). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

போதை பழக்கத்திற்கு அடிமையான ராஜாவுக்கு, நண்பர்கள் மூலம் கஞ்சா பயன்படுத்தும் பழக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர்களது அறையில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜாவின் மனைவி, அதுகுறித்து அவரிடம் கேட்டபோது “இது எனக்கு இல்லை என் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

அதைக் கேட்டு கோபமடைந்த ராஜாவின் மனைவி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜா தனது மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற ராஜாவின் மனைவி காயங்களுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் ராஜா இல்லாததை அறிந்த அவர், உடனடியாக காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது வீட்டில் இருக்கும் கஞ்சாவை பற்றியும், தன் கணவனை பற்றியும் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டில் இருந்த கஞ்சாவை கைப்பற்றி ராஜாவையும் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும் 25 வயதான பட்டதாரி ஹரிஹரன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ராஜா, ஹரிஹரனிடமிருந்து தான் கஞ்சாவை பெற்றுள்ளார். அதே போல் ஹரிஹரனும் தான் வேறுசிலரிடம் இருந்து கஞ்சா வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்