திமுக, அதிமுகவுடன் கூட்டணியா? - விஜய பிரபாகரன் பதில்
விஜய் தேர்தலுக்கு வருவது அவரது பலம் என்று விஜய பிரபாகரன் கூறினார்.;
மதுரை,
மதுரையில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் தெளிவாக பேசியுள்ளார். ஜனவரி 9-ந் தேதி எங்கள் நிலைப்பாட்டை சொல்கிறோம் என்று சொல்லி உள்ளார். செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் சொல்லியது போல தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எங்கள் தேமுதிக கட்சியின் வலுவை நிரூபிக்க உள்ளோம்.
2011-ல் விஜயகாந்த் தலைமையில் 29 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்கு சென்றார்கள். அதேபோல பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பல எம்.எல்.ஏ.க் கள் சட்டசபைக்கு செல்வது தான் எங்களின் ஆசை. அதற்காக நான் பாடுபட்டு வருகிறேன்.
விஜய் தேர்தலுக்கு வருவது அவரது பலம். விஜயகாந்த் வேறு. விஜய் வேறு. தேமுதிகவை சங்கடப்படுத்த எந்த கட்சியாலும் முடியாது. திமுக, அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கு எங்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. விஜயகாந்த் ஆரம்பித்த கட்சி தோற்க கூடாது. யாருடன் கூட்டணி வைத்தால் ஜெயிப்போம் என்று தான் முடிவு எடுத்துள்ளோம்.
கருணாநிதி தான் விஜயகாந்திற்கு திருமணம் செய்து வைத்தார். அதன் பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகிவிட்டது. 2026-ல் தமிழகத்தில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி தான் அமையும். தமிழ்நாடு என்பது திராவிட நாடு. திராவிட கொள்கைகள் கொண்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி தான் அமையும். அதற்கான சாத்தியம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.