அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
காளைகளை அழைத்து செல்லும் இடங்களில் சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூடுதல் டி.ஜி.பி. அறிவுறுத்தினார்.;
மதுரை,
மதுரை மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேடு கிராமத்திலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. அந்த இடங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்வர்தயாள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக காளைகள், காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டை காண்பதற்காக சுற்றுப்புறமுள்ள கிராமங்களிலிருந்து வருகை தரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மேற்படி இடங்களில் கூடுவார். எனவே அந்த பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்படாதவாறு முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தலா 2 ஆயிரம் போலீசார் வீதம் பாதுகாப்பு பணிகளில் அமர்த்த வேண்டும். மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதணை செய்யும் இடங்களிலும், காளைகள் அவிழ்த்துவிடும் வாடிவாசல், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் அமரும் இடங்கள், முடிவில் காளைகளை அழைத்து செல்லும் இடங்களில் சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எவ்வித அசம்பாவிதமின்றியும், சிரமமின்றியும் ஜல்லிக்கட்டு இனிதே நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.