நாயை ஏவி சிறுமியை கடிக்கவைத்த பெண் கைது
பொன்வேல் என்பவரது 6 வயது மகள், சவுமியா வீட்டின் அருகில் விளையாடியபோது நாயை விட்டு கடிக்க வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.;
கோவை,
நாய்கள் வீட்டுக்கு வீடு வளர்ப்பது தற்போது பேஷனாகி விட்டது. ஆனால் நாயை உரிய வகையில் பயிற்சி கொடுக்காமலும், உரிய பாதுகாப்பு இல்லாமல் வளர்ப்பதாலும் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலும் மக்கள் கூடும் இடங்களுக்கு நாய்களை வாய் கவசம் அணிவித்து கூட்டி வரவேண்டும், கழுத்தில் கயிறு கட்டியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனையும் மீறி பொது வெளியில் சாதாரணமாக நாய்களை அழைத்து வரும் நிகழ்வு வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் சென்னையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறியதில் பலத்த காயம் அடைந்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல கோவையிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை அம்மன் குளம் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் ஹோட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் பொன்வேல் ( வயது 33 ) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய 5 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 1 வகுப்பு படித்து வருகிறார்.
விடுமுறை காரணமாக சிறுமி அப்பகுதியில் விளையாடி வந்துள்ளார். இதில் பொன்வேல் வீட்டின் அருகில் கண்ணன் என்பவரது மனைவி சவுமியா குடும்பத்துடன் வசித்து வருகிறார். சவுமியா வீட்டில் 4 நாய்களை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று பொன்வேலின் 1ஆம் வகுப்பு படிக்கும் மகள் வீட்டின் அருகில் விளையாடியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சவுமியா நாயை ஏவி விட்டு அவரை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. வலியால் அலறி துடித்த சிறுமி பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார். நாய் கடித்ததில் சிறுமிக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைதொடர்ந்து பொன்வேல் , கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சிறுமியை நாய் கடித்தது தொடர்பாக புகார் அளித்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் , சவுமியா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை நாய் கடித்தது குறித்து ப்ளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அந்த நாயை காப்பகத்திற்கு கொண்டுசென்றனர்.