திருநெல்வேலியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.;
உலகம் முழுவதும் இன்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின்படி உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை என்பது ஒரு தனிநபர் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல. அது சமூகத்தில் பல பின் விளைவுகளை உண்டாக்குகிறது.
சராசரியாக சென்ற வருடத்தில் உலகம் முழுவதும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்தியாவில் 2021-ல் தேசிய குற்றவியல் ஆவண தகவலின்படி ஒரு லட்சம் நபர்களுக்கு சுமார் 13.1 நபர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 18,295 பேர் இப்படி இறந்துவிட்டனர். இந்தியாவில் இறப்புக்கான காரணங்களில் தற்கொலை என்பது இரண்டாவது நிலையில் உள்ளது. எனவே அது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அரசு பல முயற்சிகள் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் எல்லா மருத்துவமனைகளிலும் மனநலத்துறையில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் கவுன்சிலர்கள் மூலம் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்பவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. வரும் காலத்தில் மீண்டும் இதுபோன்ற முயற்சிகளை தடுக்க தக்க ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு குறிப்பாக தேர்வு எழுதிவிட்டு காத்திருக்கும் காலத்தில் அவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் மனநலம் காக்க தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு 'MANAM'- மனநல நல்லாதரவு மன்றம் என்ற மாணவர்கள் குழுக்கள் உருவாக்கி அவர்கள் மூலமாக மாணவர்களின் மனநலம் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதை பழக்கங்களில் இருந்து விடுபட அல்லது அதனால் தற்கொலை செய்வதை தடுக்க அரசு "கலங்கரை" என்ற போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாத தொலைபேசி 14416 என்ற எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் மனநலம் குறித்த எல்லா தகவல்களையும் மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணிக்கு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமை வகித்தார்.
பேரணியில் துணை முதல்வர் சுரேஷ்துரை, மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவர் சியாம் சுந்தர்சிங் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி சென்றனர். பேரணி மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி, மனநல மருத்துவதுறை சார்பில் பேராசிரியர்கள் ரமேஷ்பூபதி, ராமானுஜம் மற்றும் உதவி போராசிரியர்கள் மாணவர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.