திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,905 பேர் எழுத உள்ளனர்

காவலர் தேர்வினை எழுத வருபவர்கள் இன்று காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். 9.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.;

Update:2025-11-09 00:44 IST

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர்/சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று (9.11.2025) தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 3 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் பின்வரும் 3 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு மைய விபரங்கள்:

(1) புஷ்பலதா வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி, தியாகராஜநகர்- 2,000 ஆண் விண்ணப்பதாரர்கள், (2) PSN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூர், மேலத்திடியூர்- 1,603 ஆண் விண்ணப்பதாரர்கள், (3) ராணி அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்) பேட்டை- 1,302 பெண் விண்ணப்பதாரர்கள் என மொத்தமாக 3,603 ஆண் விண்ணப்பதாரர்கள், 1,302 பெண் விண்ணப்பதாரர்கள் என மொத்தம் 4,905 விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் எழுத்துத் தேர்வு பணியில் ஈடுபடும் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களுக்கு தேர்வு நடைமுறை தொடர்பாக விளக்கங்களும், அறிவுரைகளும் நேற்று மாவட்ட எஸ்.பி.யால் வழங்கப்பட்டது.

இந்த தேர்வு பணியில் மொத்தம் 423 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். கண்காணிப்பு பொறுப்பாளராக மேற்சொன்ன தேர்விற்கு சிறப்பு அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த காவல்துறை தலைவர் (Establishment) K.S.நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் மாவட்ட எஸ்.பி.யுடன் இணைந்து தேர்வு மையங்களை பார்வையிட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவுரைகள்:

விண்ணப்பதாரர்கள் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். 9.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

ஹால் டிக்கெட், புகைப்படம் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஒரிஜினல் ID PROOF ஏதேனும் ஒன்று மற்றும் கருப்பு பந்து முனைப் பேனா மட்டுமே அனுமதிக்கப்படும். Cell Phone, Smart Watch, Calculator, Electronic Gadgets மற்றும் Bags ஆகியவை அனுமதிக்கப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேரத்தை கடைபிடித்து 8 மணி முதல் 9 மணி வரை மையத்துக்கே வந்து தமக்கான இருக்கையை உறுதிபடுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்கும் அனைத்து தேர்வாளர்களுக்கும், சிறப்பான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்