இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு: வாலிபர் கைது
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.;
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம், தச்சகுடி தெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் மது (வயது 22) என்பவர் சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் இரு பிரிவினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இதுகுறித்து தேவர்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிய வந்ததையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் லூக்அசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சமூக வலைதளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட மது என்பவரை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.