பழமைக்கு மகுடம்; புதுமைக்கு கம்பளம்!

ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தது தமிழக மக்களின் நெஞ்சை குளிர வைத்துள்ளது.;

Update:2025-07-29 05:06 IST

"தென்கோடி தூத்துக்குடி, திருத்தும் துறைமுகத்தால் பொன் கோடி விளையும் எங்கள் தாயகமே, இன்ப பூந்தோட்டமாகும் எங்கள் தமிழகமே" என்பது 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள். இன்று அந்த பாட்டை பாடவேண்டும் என்றால் திருத்தும் துறைமுகத்தால் என்பதற்கு பதிலாக விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தால் என்று பாடவேண்டும். 1992-ம் ஆண்டு தூத்துக்குடியில் கட்டப்பட்ட விமானநிலையத்தில் ஏ.டி.ஆர். ரக சிறிய விமானங்கள் மட்டுமே வந்து போய்க்கொண்டு இருக்கின்றன. கடந்தவாரம் இங்கிலாந்து, மாலத்தீவில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இரவு 8.30 மணிக்கு வந்து, விரிவாக்கம் செய்யப்பட்ட அந்த விமான நிலையத்தை திறந்துவைத்தார்.

புதிய விமான நிலையம், பழைய விமான நிலையத்தைவிட 17 மடங்கு பெரியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விமான நிலையத்தில் ஆண்டுக்கு 1,300 விமானங்கள் மட்டுமே வந்து போய்க்கொண்டு இருந்த நிலையில், புதிய விமான நிலையத்தில் இனி 3,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்துபோக முடியும். இதுபோல ரன்வேயும் 1,300 மீட்டரில் இருந்து 3,100 மீட்டராக விரிவாக்கப்பட்டுள்ளது. அதாவது பழைய விமான நிலைய ரன்வேயைவிட 2½ மடங்கு பெரியது என்பதால் 'ஏர் பஸ்' போன்ற பெரிய விமானங்களையும் கையாள முடியும். இரவுநேர விமான போக்குவரத்துக்கும் வசதி இருக்கிறது. இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் தென் தமிழ்நாட்டின் பயணம், சுற்றுலா, வர்த்தகத்துக்கு நுழைவு வாயிலாக திகழ்கிறது. பழைய விமான நிலையம் சரக்கு முனையமாக மாற்றப்படும் என்பதால் விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள், சிறு தொழில் அதிபர்கள் தங்கள் பொருட்களை விமானம் மூலம் பல இடங்களுக்கு ஏற்றி அனுப்பமுடியும். ஆக பல வளர்ச்சிகளுக்கு இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறது.

அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழ்நாட்டுக்கே பெரிய வரலாறை உருவாக்கிய முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்வழி வெற்றி மற்றும் அவர்கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நினைவுவிழா, ஆடித்திருவாதிரை நாள் ஆகிய முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டது பழமையான சரித்திரத்துக்கு மகுடம் சூட்டியதுபோல இருந்தது. மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாவாய் என்ற பெயரில் கடற்படை உருவாக்கி கடல் கடந்து பல நாடுகளுடன் போரிட்டு வெற்றி கண்டிருக்கிறார்.

அவருக்கு நாடு பிடிக்கும் ஆசை கிடையாது என்பது அவர் வெற்றி பெற்ற நாடுகளையெல்லாம் தன் ஆளுகைக்கு உட்படுத்தாமல், அந்த நாட்டில் ஒருவரிடமே ஒப்படைத்து திரும்பியதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். அவர் காலத்தில் அவர்தான் பல நாடுகள் மீது படையெடுத்து சென்றாரே தவிர, சோழநாட்டு மீது எவரும் படையெடுத்ததில்லை. ராஜேந்திர சோழன் கங்கையில் இருந்து நீர் எடுத்து வந்து பொன்னேரியில் ஊற்றினார் என்ற வரலாற்றை நினைவுகூரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கங்கையில் இருந்து கொண்டுவந்த தண்ணீரை கொண்டு கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அபிஷேகம் செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தது தமிழக மக்களின் நெஞ்சை குளிர வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்