இந்தியாவும், சீனாவும் சமாளிக்கும்
இரு நாடுகளும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாது.;
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதிலிருந்தே, அமெரிக்காதான் “சூப்பர் பவர்” என்பதுபோல் உலகையே ஆட்டிப் படைக்க நினைக்கிறார். முதலில் ‘பரஸ்பர வரி’ என்று கொண்டு வந்து, இந்தியாவுக்கு 25 சதவீதமும், சீனாவுக்கு 34 சதவீதமும் வரி விதித்தார். தொடர்ந்து இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது என்று கூறி, அதற்காக மேலும் 25 சதவீத அபராத வரி என்று மொத்தமாக 50 சதவீத வரி விதித்தார். இப்போது 500 சதவீத வரி என்று மிரட்டிக்கொண்டு இருக்கிறார். சீனாவுக்கு தற்போது 56 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் 500 சதவீத வரி விதிப்போம் என்று பயமுறுத்துகிறார். மேலும், ஈரானிடமிருந்து பொருட்கள் வாங்கினால் அதற்கும் கூடுதலாக 25 சதவீத வரி விதிப்போம் என்று ஆட்டம் காட்டுகிறார். ஆனால் இந்தியாவும், சீனாவும் இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படவில்லை.
இந்த வரிவிதிப்புகளால் தொடக்கத்தில் அமெரிக்காவுடன் நடத்திக்கொண்டிருந்த வர்த்தகத்தில் சற்று பாதிப்பு இருந்தாலும், இரு நாடுகளும் ‘ஒரு கதவு மூடினால் மற்ற கதவுகள் திறக்கும்’ என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டன. இந்தியா, இங்கிலாந்துடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 27 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பணியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும், இதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேற்கொண்ட ஏற்றுமதியை விட 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதாவது, கடந்த டிசம்பரில் 37.8 பில்லியன் டாலர், இந்திய அளவில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 200 கோடி அளவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, இந்த டிசம்பரில் 38.51 பில்லியன் டாலராக (ரூ.3,46,590 கோடி) உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலகட்டத்தில் மட்டும் 2.44 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த 9 மாத காலகட்டத்தில் மட்டும் 339.29 பில்லியன் டாலருக்கு (ரூ.30,53,610 கோடி) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் குறிப்பாக, ஸ்பெயினுக்கு செய்த ஏற்றுமதி 53.33 சதவீதமும், சீனாவுக்கு 36.68 சதவீதமும், ஹாங்காங் நாட்டுக்குச் செய்த ஏற்றுமதி 25.75 சதவீதமும் உயர்ந்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு செய்த ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது. தானிய வகைகள், காபி, இரும்புத்தாது, இறைச்சி மற்றும் கோழி இறைச்சி, பால்பொருட்கள், மின்னணு பொருட்கள், கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி அதிக அளவில் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவை போல சீனாவின் வர்த்தகமும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து உபரியாக சாதனை படைத்துள்ளது. இறக்குமதியை விட ஏற்றுமதி 1.2 டிரில்லியன் டாலர் (ரூ.108 லட்சம் கோடி) உபரியாக இருந்து, மற்ற நாடுகளை வியப்புடன் பார்க்க வைத்துள்ளது. ஆக சீனா பக்கம் அமெரிக்காவால் நெருங்கக்கூட முடியாத நிலை உருவாகியுள்ளது. மொத்தத்தில், அமெரிக்காவின் வரி விதிப்பு இந்தியாவையும், சீனாவையும் எந்த விதத்திலும் கீழே தள்ளிவிடவில்லை. அமெரிக்கா இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தன் கதவுகளை மூடினால், மற்ற நாடுகள் தங்கள் கதவுகளை விசாலமாகத் திறந்து வைத்துள்ளன. ஆகவே, இந்த இரு நாடுகளும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாது. மொத்தத்தில் இருநாடுகளும் சமாளிக்கும்.