6 வாரங்களுக்கு மட்டுமல்ல; இனி எப்போதும் வேண்டாம்!
காசா பகுதி மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை நோக்கி ஆடல்பாடலுடன் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்.;
எங்கே இது 3-வது உலகப்போராக மாறிவிடுமோ? என்ற அச்சத்தை கடந்த 15 மாதங்களாக ஏற்படுத்தி வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர், 6 வார காலம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே இருப்பது ஒரு தீராத வரலாற்று பகை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
1967-ம் ஆண்டுக்கு முன்பு வரை பாலஸ்தீனத்திலுள்ள காசா பகுதி எகிப்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அந்த ஆண்டு நடந்த போரில் இஸ்ரேல், எகிப்து வசம் இருந்த காசா பகுதியை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. ஆனால், 2005-ம் ஆண்டுக்கு பிறகு காசாவை பாலஸ்தீனத்தின் அதிகார வரம்புக்குள் ஒப்படைத்துவிட்டு இஸ்ரேல் வெளியேறியது. ஆனால், காசா பகுதி ஹமாஸ் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். மோதல், தாக்குதல் என்ற நிலைதான் தொடர்ந்தது.
இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி காசா முனைப்பகுதியில் இருந்த ஹமாஸ் அமைப்பினர் அண்டை நாடான இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து 1,200-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததோடு மட்டுமல்லாமல், அங்கிருந்து சுமார் 250 பேர்களை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுவிட்டனர். வீறு கொண்டு எழுந்த இஸ்ரேல் காசா மீது தரைப்படை, விமானப்படை, கப்பல் படை என்று முப்படைகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியது. இருபக்கமும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதிகள் உள்பட 46 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துவிட்டனர்.
90 சதவீத பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் எடுத்த பெரு முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. கடந்த வாரம் கத்தாரில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தத்துக்கான ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. காசா அமைப்பினரிடம் இருக்கும் 94 இஸ்ரேல் பிணைக் கைதிகளில் 33 பேர் விடுவிப்பு, இஸ்ரேல் சிறையில் இருக்கும் 1,900 பாலஸ்தீனர்கள் விடுதலை, காசாவில் உள்ள இஸ்ரேல் படைகள் விலக்கிக்கொள்ளப்படுதல் ஆகிய 3 முதல் நடவடிக்கைகளால் 6 வார காலத்துக்கான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் பிற்பகல் 2.45 மணிக்கு அமலுக்கு வந்தது.
குண்டு சத்தம் ஓய்ந்து எங்கும் அமைதி திரும்பியது இருநாட்டு மக்களையும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்க செய்தது. காசா பகுதி மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை நோக்கி ஆடல்பாடலுடன் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். போர் நிறுத்தம் என்பது இந்த 6 வார காலத்துக்கு மட்டும் இல்லாமல், போர் என்பது எப்போதும் இல்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும். நிரந்தர போர் நிறுத்தத்துக்கு இன்னும் போக வேண்டிய தூரம் உள்ளது. இந்த 6 வார போர் நிறுத்தத்துக்கு உதவிய அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்பட அனைத்து நாடுகளும் இரு பிரிவினருக்கு இடையே இருக்கும் பகை உணர்ச்சிக்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டு, அமைதியான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கவேண்டும். முழுமையான பாலஸ்தீன சுதந்திரம் மற்றும் இரு நாடுகளின் பரஸ்பர அங்கீகரிப்பு, நட்புறவு போன்ற நிரந்தர தீர்வுகளை நோக்கி அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும்.