வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி

வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-15 02:57 IST

டாக்கா,

வங்காளதேச தலைநகர் டாக்காவில் ரூப்நகர் பகுதியில் வங்காளதேச வர்த்தக பல்கலைக்கழகத்துக்கு எதிரே ஒரு ரசாயன கிடங்கும், அதன் அருகே 4 மாடிகள் கொண்ட ஜவுளி ஆலையும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில், ரசாயன கிடங்கில் ரசாயன பொருட்கள் வெடித்தன. அதனால் தீவிபத்து ஏற்பட்டது.அருகில் உள்ள ஜவுளி ஆலைக்கும் தீ பரவியது. 4 மாடிகளிலும் தீப்பிடித்துக்கொண்டது. தகவல் அறிந்து 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தன.

அதன்பிறகு ஜவுளி ஆலையில் சோதனை நடத்தியபோது, 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் ஜவுளி ஆலை தொழிலாளர்கள் ஆவர். ஆனால் அவர்கள் அடையாளம் காணப்படவில்லை.

ரசாயன கிடங்கில் இருந்து உருவான விஷ வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி முகமது தஜுல் இஸ்லாம் சவுத்ரி தெரிவித்தார். ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணம், விசாரணைக்கு பிறகு தெரிய வரும் என்றும் அவர் கூறினார். மேலும் சில தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் டாக்கா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்