அமெரிக்காவில் இஸ்கான் கோவில் மீது தொடர் துப்பாக்கி சூடு தாக்குதல்; இந்திய தூதரகம் கண்டனம்
இஸ்கான் கோவிலின் உள்ளே பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் இருக்கும்போது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது.;
நியூயார்க்,
அமெரிக்காவின் உதா மாகாணத்தில் உள்ள ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்காக உலக புகழ் பெற்றது. தினமும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில், இதன் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதில், 20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை கோவிலின் கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள் மீது பாய்ந்துள்ளன.
இதனால், ஆயிரக்கணக்கான டாலர் அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து அந்த கோவிலின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுபற்றிய அறிக்கை ஒன்றை அந்த கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதுபற்றிய புகைப்படங்களையும் இணையதளத்தில் பகிர்ந்து தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த தாக்குதல் நடந்து வருகிறது. பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் கோவிலின் உள்ளே இருக்கும்போது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு அந்நாட்டின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது. குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்றும் தொடர்புடைய அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளது.