‘ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பது சரியான யோசனை’ - ஜெலன்ஸ்கி
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார்.;
கீவ்,
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இதற்கிடையில் சமீபத்தில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா சென்றார். இந்த உச்சிமாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோரை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது சமூக வலைதளத்தில், “இந்தியாவையும், ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டார். இதனிடையே, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதலாக வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக, தியான்ஜின் உச்சிமாநாட்டிற்கு 2 நாட்களுக்கு முன், பிரதமர் மோடியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அவரிடம், ரஷியா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும், அதற்கான முயற்சிகளுக்கு முழு ஆதரளிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது தியான்ஜின் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரிடையே நிகழ்ந்த சந்திப்பின் மூலம், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா? என ஜெலென்ஸ்கியிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, “அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். ரஷியாவுடன் தொடர்ந்து ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் நாடுகள் மீது வரிகளை விதிப்பது சரியான யோசனை என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.