தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர் - பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு

தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர் என்று பா.ஜ.க. எம்.பி. சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

Update: 2024-03-19 16:03 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரத்பேட்டையை சேர்ந்த முகேஷ் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது கடையில் இந்து மதக்கடவுள் அனுமன் பாடல்களை சத்தமாக வைத்து கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் வழிபாட்டிற்கு வந்த இளைஞர்கள் அனுமன் பாடல் சத்தத்தை குறைக்கும்படி கூறி வாக்குவாதம் சென்றனர். பின்னர், கடைக்குள் இருந்து வெளியே வந்த முகேஷை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. தாக்குதலில் காயமடைந்த முகேஷ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று பின்னர் அந்த இளைஞர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தார். முகேஷ் மீது கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இதனிடையே, செல்போன் கடை நடத்தி வந்த இந்து மதத்தை சேர்ந்த வியாபாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறி பா.ஜ.க., இந்து அமைப்புகள் நகரத்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் சோபா கரந்தலாஜே, பி.சி.மோகன், தேஜஸ்வி சூர்யா உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. எம்.பி.யும், மத்திய மந்திரியுமான சோபா கரந்தலாஜே, தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இது தொடர்பாக மத்திய மந்திரி சோபா கரந்தலாஜே கூறுகையில்,

இஸ்லாமிய மத வழிபாடு நிறைவடைந்தபின்னர் தான் நாங்கள் இங்கிருந்து செல்ல அனுமதிக்கப்படுவர் என்று போலீசார் கூறுகின்றனர். யாருடைய அரசாங்கம் இங்கு நடைபெறுகிறது என சித்தராமையாவை நான் கேட்கிறேன்?. இந்து மதத்தினர் உங்களுக்கு வாக்களிக்கவில்லையா? இந்து மதத்தினர் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வருகின்றனர். தமிழ்நாட்டில் பயிற்சிபெற்று கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர். உணவகத்தில் வெடிகுண்டு வைக்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து வந்த ஒரு நபர் உணவகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளார்.

டெல்லியில் இருந்து வந்த நபர் கர்நாடக சட்டமன்றத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்புகிறார். கேரளாவில் இருந்து வந்த நபர் கல்லூரி மாணவர்கள் மீது ஆசிட் வீசுகிறார். கடையில் அனுமன் பாடலை கேட்டுக்கொண்டிருந்த இளைஞர் மீது கும்பலாக வந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

ஆர்.டி.நகரில் இளைஞர்கள் வாளுடன் சுற்றித்திரியும் வீடியோவை நான் தற்போது பார்த்தேன். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அரசு (கர்நாடக காங்கிரஸ் அரசு) சிறுபான்மையினரை பாதுகாக்கிறது. இந்த அரசு இந்து மதத்தினருக்கு எதிரானது.

கர்நாடகாவில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. கர்நாடக உள்துறை மந்திரி பரமேஷ்வரா பதவி விலக வேண்டும். நாங்கள் தொடர்ந்து போராடுவோம்' என்றார்.

கர்நாடகாவின் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளியில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1ம் தேதி பயங்கர சத்தத்துடன் 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்பதால் தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஷபீர் முகமது என்ற நபரை சந்தேகத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ. கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதேவேளை, தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கின்றனர் என்று பா.ஜ.க. எம்.பி.யும், மத்திய மந்திரியுமான சோபா கரந்தலாஜே பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.





Tags:    

மேலும் செய்திகள்