2-வது ஒருநாள் போட்டி: சூப்பர் ஓவரில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.;

Update:2025-10-22 00:44 IST

image courtesy:ICC

மிர்புர்,

வங்காளதேசம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சவுமியா சர்கார் 45 ரன்னும், ரிஷாத் ஹூசைன் 39 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 32 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவௌியில் வீழ்ந்தன. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன் தேவையாக இருந்தது. பரபரப்பான இறுதி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சைப் ஹசன் வீசினார். அதில் அவர் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியும் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் சேர்த்தார். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹூசைன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 10 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்காளதேச அணி 6 பந்துகளில் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன்களே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்